சீனா, கடந்த 2022ல், 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்தியது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில், 60 விண்வெளி திட்டங்களையும், 200க்கும் மேற்பட்ட விண்கலங்களை ஏவும் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, விண்வெளியில், சீனா தனியாக கட்டமைத்து வரும் விண்வெளி நிலையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமை அடையும் என சீனா தெரிவித்துள்ளது.
நிகழாண்டில், விண்வெளி நிலைய கட்டமைப்புகளுக்காக, தியான்சோ 6, சென்சோ 16, 17 ஆகிய விண்வெளி திட்டங்களை சீனா திட்டமிட்டுள்ளது. அத்துடன், வணிகரீதியான செயற்கைக்கோள் அமைப்பு ஒன்றை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவை தவிர, நிலவு குறித்த ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியிலும் சீனா பல்வேறு விண்வெளி திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக பல்வேறு கட்டங்களில் சாங் ஏ விண்கலம் செலுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளது. மேலும், மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய வகையில் ராக்கெட்டுகள் வடிவமைப்பிலும் சீனா ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், சீன விண்வெளி துறையில், 2023ல் அபரிமிதமான வளர்ச்சி எட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.














