சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான தூதராக செயல்பட்டு வரும் கின் காங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, வாங் யீ அந்த பதவியை வகித்து வருகிறார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரங்களுக்கு செல்ல உள்ளதால், கின் காங் வெளியுறவு அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஹூவா சுயிங் இந்த தகவலை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 5ம் தேதி முதல், சீனாவில் புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சரின் மாற்றம் குறித்த செய்தி எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கின் காங், ஏற்கனவே வெளியுறவு அமைச்சகத்தில் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ஆங்கில மொழியில் புலமை வாய்ந்தவர். சீனா தொடர்பான விவகாரங்களுக்கு அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி இவர் உரையாற்றுவது வழக்கம். மேலும், இந்தியா சீனா எல்லை பிரச்சனைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் இவர் வசம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.