சிப்லா நிறுவனம், பல்வேறு நோய்களை கண்டறிய உதவும் புதிய கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவி மூலம், நீரிழிவு பாதிப்பு, இதய நோய் பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு மற்றும் தைராய்டு இயக்கம் மற்றும் உடல் இயக்கம் போன்றவற்றை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப்பாய்ண்ட் (Cippoint) என்று இந்த கருவிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பாவின், மருத்துவ கருவிகளை சோதனை செய்யும் அமைப்பான European In Vitro Diagnostic Device Directive ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய சிப்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அச்சின் குப்தா, "நோய்களை கண்டறிவதற்கான கருவிகளை உருவாக்குவதில் தொடர்ந்து புதுமையான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள சிப்பாய்ண்ட் கருவி மூலம் எண்ணற்ற நோயாளிகள் பயனடைவர்" என்று கூறினார்.
சிப்பாயிண்ட் கருவி மூலம் 3 முதல் 15 நிமிடங்களுக்குள் நோய் பாதிப்பு குறித்த விவரங்களை மருத்துவர்கள் அறிய முடியும் என கூறப்படுகிறது. மேலும், நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை அளித்தல் இவற்றுக்கு இடையிலான இடைவெளியை இந்த கருவி குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.