இந்தியாவின் நிலக்கரி தயாரிப்பு 12.29% உயர்ந்து 664.37 மில்லியன் டன் அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரையில் இந்த நிலவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 591.64 மில்லியன் டன் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அண்மை அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆலைகளில் இருந்து விநியோகத்துக்கு அனுப்பப்பட்ட மொத்த நிலக்கரி அளவு 692.84 மில்லியன் டன் அளவில் உள்ளது. இது முந்தைய ஆண்டில் 662.4 மில்லியன் டன் அளவில் பதிவாகி இருந்தது. எனவே, நிலையான முறையில் நிலக்கரி தயாரிப்பு முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், எரிசக்தி துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி அளவில் 8.39% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 532.43 மில்லியன் டன் நிலக்கரி எரிசக்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.














