சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை நீடித்து வருவதாலும், அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வில்லிவாக்கம், ரெட்டேரி உள்ளிட்ட சிறிய குளம் முதல் பெரிய ஏரி வரை தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும்போது, மழைநீர் வடிகால் வழியாக குளத்திற்கு வரக்கூடிய தண்ணீரை எளிமையாக உள்வாங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.