'பிப்பர்ஜாய்' புயல் தீவிர புயலாக வலுவடைந்ததால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற்றது. இந்த 'பிப்பர்ஜாய்' என்ற புயல் தீவிர புயலாகவும் வலுவடைந்து, அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த புயலாலும், தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தாலும் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கமும் இருக்கும் எனவும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.