பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 631 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள மற்ற நாட்டு கைதிகள் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் பரிமாறிக்கொள்கின்றன. அந்த வகையில் இந்திய சிறைகளில் உள்ள 339 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் அந்த நாட்டு மீனவர்கள் 95 பேர் அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் தூதரகத்திடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கியது. அதேபோல பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 51 இந்திய கைதிகள், 654 இந்திய மீனவர்கள் அடங்கிய பட்டியலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்த நாடும் ஒப்படைத்து இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் 2 கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகளுக்கு தூதரக உதவிகளை வழங்குமாறும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.