உலகிலேயே முதல் முறையாக டென்மார்க் நாடு காற்று மாசை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பன்றிகள், பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்கப்படுகிறது. வரும் 2030 ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என டென்மார்க் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. டென்மார்க் நாடு, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை 70% குறைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் பகுதியாக, கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டை பொருத்தவரை கால்நடை வளர்ப்பு முக்கியமான தொழிலாகும். கால்நடைகளின் சாணம் உள்ளிட்டவற்றால் அதிகளவிலான மீத்தேன் வெளியேறுவதாக கூறப்படுகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கார்பன் வரி விதிக்கப்படுகிறது.