தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் குறைகள் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரியில் உள்ள ஐஜிஎம்சி ஆர்ஐ மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கைரேகை மூலம் பதிவு செய்யப்படும் வருகை பதிவேட்டு கருவியில், விடுப்பு விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கல்லூரி வளாகத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பது, போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன. இந்த 3 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வருட இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அங்கீகாரத்தை திரும்பப் பெறும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட துவங்கி உள்ளனர்.