ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2ம் முறையாக 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.டெல்லி, கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது, ஏர் இந்தியா நிறுவனம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரியவந்து. அதற்கான அறிவிப்பானை (நோட்டீஸ்) கடந்த நவம்பர் 3ம் தேதி அனுப்பப்பட்டது. அதற்கு, ஏர் இந்தியா நிறுவனம் அளித்த பதில்களை பரிசீலனை செய்து இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டி ஜி சி ஏ தெரிவித்துள்ளது. முக்கியமாக, தாமதமான விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முறையான தங்கும் வசதி ஏற்படுத்தி தராதது, ஏர் இந்தியா ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படாதது, உயர்ரக பயணச் சீட்டுகளை பெற்று சாதாரண பயணச் சீட்டில் பயணித்தவர்களுக்கான இழப்பீடுகளை முறையாக வழங்காதது போன்ற குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.