உலக அளவில் இந்திய வம்சாவளியினரின் பங்கு முக்கியம் என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டம் உலகளவில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இயங்குகிறது. இதில் இந்திய வம்சாவளியினரின் பங்கு முக்கியம் என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார். ஒடிஸா மாநிலம் புவனேசுவரில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் அவர் இதனை கூறினார். அதில், பிரதமர் மோடி தலைமையில், இந்திய அரசின் முழு கவனம் வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பம், சுற்றுலா, வா்த்தகம், முதலீடு போன்ற துறைகளில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மத்திய அரசின் இலக்கு. இந்திய வம்சாவளியினர்கள், இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.