திமுக கட்சியை சேர்ந்த எம்பி தயாநிதி மாறன், இணைய வழி வங்கி மோசடியில் 99999 ரூபாய் இழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.ஆக்சிஸ் வங்கியில் தயாநிதி மாறனின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கு இயங்கி வருகிறது. இந்த கணக்கிலிருந்து சட்டவிரோதமாக சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடி உள்ளனர். சைபர் குற்றவாளிகள் ஈடுபட்ட மிகப்பெரிய வங்கி மோசடி நடவடிக்கை, வங்கியின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி நடைபெற்றது, வியப்பை தருவதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அதாவது, பண பரிவர்த்தனையை உறுதி செய்வதற்காக அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் தனக்கு வரவே இல்லை என கூறியுள்ளார். எனவே, இது தொடர்பாக சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவில் வழக்கு பதிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டிஜிட்டல் இந்தியாவில் தனிநபர் தரவுகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.