அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் நடப்பு அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, குடியரசு கட்சி சார்பில் 4 பேர் அதிபர் வேட்பாளராக களமிறங்கினர். தற்போதைய நிலவரப்படி, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி முதலில் விலகினார். அவரை தொடர்ந்து, ராம் டி சாண்டிஸ் விலகினார். அதனால், டொனால்ட் டிரம்ப் மற்றும் நிக்கி ஹாலே மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த நிலையில், நியூ ஹாம்சயர் மாகாணத்தில் அதிபர் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. இதில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பை பொறுத்தவரை, நிக்கி ஹாலேவை விட ட்ரம்புக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது.














