இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தை டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தை கூறியுள்ளார். சிக்காகோவில் கருப்பின பத்திரிகையாளர்களின் தேசிய மாநாடு நடைபெற்றது. அதில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அதை மட்டுமே அவர் ஊக்குவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்கு தெரியாது. தற்போது அவர் கருப்பினத்தவராக அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பு இனத்தவரா என்பது தெரியவில்லை. அவர் வெளிப்படையாக இல்லை. எல்லா வழிகளிலும் அவர் இந்தியராகவே இருந்தார். திடீரென்று கருப்பினத்தவர் ஆகிவிட்டார். இந்த நாட்டின் கருப்பின மக்களுக்கு நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார். ட்ரம்பின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கருத்து கூற டிரம்பிற்கு எந்த உரிமையும் இல்லை. அவருடைய கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பதாகும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.