கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன சில்லறை விற்பனை 10.51% சரிந்துள்ளதாக வாகன முகவர்கள் மற்றும் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 3739 மின்சார வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 3346 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. பயணிகள் வாகன விற்பனை சரிவடைந்தது போலவே, மின்சார சரக்கு வாகன விற்பனையும் 23% சரிவை பதிவு செய்துள்ளது. மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரை, ஏற்ற இறக்கமின்றி சீரான நிலை நிலவுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை 17% சரிந்து, 2426 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், எம்ஜி மோட்டார்ஸ் சில்லறை விற்பனை 12.55% சரிந்து 425 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில் பி ஒய் டி இந்தியா நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை 164% உயர்ந்து 132 ஆக பதிவாகியுள்ளது. மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை 29 எண்ணிக்கையிலிருந்து 123 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், டிசம்பரில் 91 வாகனங்கள் விற்பனையான நிலையில், ஜனவரியில் 111 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.