எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகன ஆலையை அமைக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்த முடிவு வெளியானது. தற்போது, டெஸ்லா நிறுவனம், புனே நகரில் அலுவலக இடம் ஒன்றை, 5 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு கையெழுத்துட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புனேயில் உள்ள விமான் நகர் பஞ்சசீல் பிசினஸ் பார்க் பகுதியில், அலுவலக இடம் 5 ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. டெஸ்லா இந்தியா மோட்டார் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் அலுவலகம் கையெழுத்தாகியுள்ளது. மாத வாடகையாக 11.65 லட்சமும், பாதுகாப்பு வைப்பு தொகையாக 34.95 லட்சமும் டெஸ்லா நிறுவனம் செலுத்த உள்ளது. இந்த அலுவலக இடம் 5850 சதுர அடி அளவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், அலுவலக வளாகத்தில் உள்ள 5 கார் பார்க்கிங் மற்றும் 10 பைக் பார்க்கிங் பகுதிகளும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒப்பந்த காலம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.