மேற்கத்திய தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், வடகொரியா அரசு Hamburger, Ice cream போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
வடகொரியா, உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சர்வாதிகார நாடு. இங்கு பல தசாப்தங்களாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக இருக்கிறார். அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான கட்டுப்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரிய அரசு சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஹம்பர்கர், ஐஸ்கிரீம், கரோக்கி போன்ற சொற்கள் இனி பயன்பாட்டில் இருக்காது. இந்த நடவடிக்கை, மேற்கத்திய மற்றும் தென் கொரிய கலாச்சாரத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அரசு அங்கீகரித்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அந்நாடு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சுற்றுலா வழிகாட்டிகள் மூன்று மாத சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, வடகொரியாவின் தனித்துவமான கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.