பால்வீதியில் சுமார் 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள V404 Cygni என்ற விண்வெளிப் பகுதியில், விஞ்ஞானிகள் ஒரு அரிய வகை கருந்துளை அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த அமைப்பில், ஒரு கருந்துளைக்கு இரண்டு நட்சத்திரங்கள் துணை நட்சத்திரங்களாக உள்ளன. இதுவரை, ஒரு கருந்துளைக்கு ஒரு நட்சத்திரம் மட்டுமே துணை நட்சத்திரமாக இருக்கும் என்பதுதான் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்து. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு அந்தக் கருத்தை சுக்கு நூறாகச் சாய்த்துள்ளது.
இந்த அமைப்பில் உள்ள நெருங்கிய நட்சத்திரம் 6.5 நாட்களில் ஒரு முறை கருந்துளையைச் சுற்றி வருகிறது. ஆனால், தொலைதூர நட்சத்திரம் 70,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுதான் கருந்துளையை ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த கண்டுபிடிப்பு, கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்ற கேள்விக்கு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது. பொதுவாக, ஒரு நட்சத்திரம் தனது ஆயுட்காலம் முடிந்து வெடிக்கும்போதுதான் கருந்துளை உருவாகும் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த அமைப்பில் உள்ள கருந்துளை, வெடிப்பு இல்லாமல் நேரடியாக உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த கெவின் பர்ட்ஜ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, ஐரோப்பிய விண்வெளி முகமையின் கியா செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.