சிறை தண்டனை பெற்ற தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜாகோப் சுமா மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஜாகோப் சுமா கடந்த 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாததால் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜாகோப் சுமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் வரும் 29ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட ஜாகோப் சுமா மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு வயது 82. தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பின்படி 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. குற்றவியல் வழக்கில் ஜாகோப் சுமா சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.














