கடந்த பிப்ரவரி மாதம், 50000 ஆண்டுகளுக்கு பின்னர், பச்சை வால் நட்சத்திரம் பூமியிலிருந்து காணப்பட்டது. தற்போது 2024 ஆம் ஆண்டு, பச்சை வால் நட்சத்திரத்தை விட பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று காட்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என்று அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், 2024 ஆம் ஆண்டு நீண்ட நாட்களுக்கு காட்சியளிக்கும் என்று பிபிசி யின் ‘ஸ்கை அட் நைட்’ என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, தென் ஆப்பிரிக்காவின் விண்கல் ஆய்வு தளமான ‘அட்லஸ்’ மூலம் கண்டறியப்பட்டது. பின்னர், இதே விண்பொருள், 6 வாரங்களுக்கு முன்னால், சீனாவின் பர்பிள் மௌண்டைன் ஆய்வகத்தில் இருந்தும் காணப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக, தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டதில், இந்த வால் நட்சத்திரம் வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையே உள்ளது தெரியவந்துள்ளது. இது வரும் 2024 செப்டம்பர் 28ஆம் தேதி, சூரியனுக்கு மிக அருகில் வர உள்ளதாக கருதப்படுகிறது. மேலும், அந்த செப்டம்பர் மாதம் முழுமைக்கும், வெறும் கண்களால் காணக்கூடிய வகையில், மிகவும் பிரகாசமாக காட்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.