கைப்பேசிகள், டேப்லெட்கள் போன்றவற்றை 3 - 5 வயதுடைய குழந்தைகளுக்கு, அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக கொடுப்பதால், அவர்களது மன வலிமை பாதிப்படைவதாக ஜமா பீடியாட்ரிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் 422 பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம், கடந்த ஆகஸ்ட் 2018 முதல் ஜனவரி 2020 வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெற்றோர் எத்தனை முறை குழந்தைகளை சமாதானப்படுத்த கைபேசிகளை கொடுத்துள்ளார்கள், அதன் பின்னர் குழந்தைகளின் சுபாவம் எவ்வாறு இருந்தது, மற்றும் அதைத் தொடர்ந்து 6 மாதத்திற்கு குழந்தைகளின் சுபாவத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டன. இறுதியில், சிறிய அளவில் கோபம், ஏமாற்றம், வருத்தம் வந்தால் கூட ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் மனநிலையை குழந்தைகள் பெறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. அத்துடன், கைபேசிகளில் காண்பிக்கப்படும் காணொளிகள் மூலம் குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் திறன் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.