சென்னை-மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு கட்டண வார்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த திட்டத்தின்படி மதுரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 8 வார்டுகளும், அரசு புதிய மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 8 வார்டுகளும் உள்பட மொத்தம் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தென்னிந்தியாவில் அதிகப்படியான ஆபரேஷன்கள், மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்.