ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 186 நாட்கள் தங்கி இருந்து விட்டு பூமி திரும்பி உள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் ஸ்டீபன் பௌவன் மற்றும் வுட்டி ஹோபர்க், ஐக்கிய அரபு அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நையாடி, ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெட்யேவ் ஆகிய நால்வரும் பத்திரமாக பூமி திரும்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச நேரப்படி இன்று அதிகாலை 12:17 மணிக்கு, அவர்கள் ப்ளோரிடா கடற்கரையில் தரையிறங்கியுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அவர்கள் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரூ 7 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அழைத்துச் சென்ற டிராகன் விண்கலம், க்ரூ 6 வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.