பிரான்ஸ் நாட்டில், கடந்த வாரம் 17 வயது சிறுவன் ஒருவனை போக்குவரத்து காவல் அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் வன்முறையை ஏற்படுத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக வன்முறை ஓயாது நடைபெற்று வந்த பிரான்ஸ் நாட்டில், தற்போது, அதன் தீவிரம் சற்று தணிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, 1300 க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று வெறும் 160 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், வன்முறை சற்று தணிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் அரசாங்கம் சற்று ஆறுதல் அடைந்துள்ளதாகவும், அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதால், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.














