இந்தியாவில் 55 சுற்றுலா தலங்களில் ஜி-20 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜி - 20 எனப்படும் உலகின் மிகப் பெரும் 20 பொருளாதார நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிச., 1 முதல் அடுத்தாண்டு நவ., 30 வரை இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்க உள்ளது. இதையொட்டி, ஒரு ஆண்டு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
ஜி - 20 மாநாடு அடுத்தாண்டு செப்., 9, 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே ஆண்டு முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை புதுடில்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்கள், மாநிலத் தலைநகரங்கள் தவிர, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற பகுதிகளில் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஹம்பி, சிலிகுரி, கட்ச், கஜுராஹோ உட்பட, 55 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுற்றுலா துறை செய்து வருகிறது. இதைத் தவிர, சுற்றுலா தலங்களிலும் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அங்கு வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.