விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய சோதனை வெற்றிகரமாக நிறைவு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ககன்யான் மனித விண்வெளிப் பயணத்துக்கான மற்றொரு மைல்கல்லை கடந்துள்ளது. விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்கும் ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (IADT-01), ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த பாராசூட் அமைப்பு, தரையிறங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தி விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறங்கச் செய்வதில் முக்கிய பங்காற்றும். இந்த சோதனையில் இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து பங்கேற்றன. இந்நிலையில், ககன்யான் பணி மூலம் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி, பூமிக்குத் திரும்பச் செய்வதில் இஸ்ரோ இன்னொரு வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.