இங்கிலாந்தில் வரும் மே இரண்டாம் தேதி பொது தேர்தல் நடத்தப்படாது என்று பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ளாட்சி தேர்தலுடன் பொது தேர்தலும் சேர்த்து வரும் மே இரண்டாம் தேதி நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த தகவலை பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது, இன்னும் சில வாரங்களில் குற்றவியல் துறை ஆணையர்களையும், காவல்துறை, உள்ளூர் கவுன்சிலர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அது மட்டுமே நடைபெறும். அந்த தேதியில் பொது தேர்தல் எதுவும் நிச்சயமாக நடத்தப்படாது என்று கூறினார். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி சமீப காலமாக நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது. மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் அவருடைய கட்சிக்கு வாக்காளர்களிடையே ஆதரவு பெருமளவில் குறைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.