போரில் உக்ரைனுக்கு உதவுவது குறித்து ஜெர்மன் நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கசிந்துள்ள ஆடியோ குறித்து ஜெர்மனி தூதரை நேரில் அழைத்து ரஷ்யா விளக்கம் கேட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிநவீன டாரஸ் ரக ஏவுகணை அளிப்பது தொடர்பாக ஜெர்மனியின் ராணுவ தளபதிகள் ஆலோசனை நடத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில் நீண்ட தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் குருஸ் வகை ஏவுகணையான டாரஸ் ரஷ்யப் படைக்கு எதிராக எவ்வாறு பயன்படும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அந்த ஆடியோவின் முடிவில் டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகளுக்குள் பேசிக்கொண்டனர். இந்த ஆடியோ தற்போது கசிந்துள்ளது. இதனால் ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தூதரக அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தங்கள் நாட்டுக்கான ஜெர்மனி தூதர் அலெக்ஸாண்டரை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.