ஜெர்மனியில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜெர்மனியில் படிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2024-2025 கல்வியாண்டில் மட்டும் 4 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் ஜெர்மனியில் படிக்க வந்துள்ளனர். இந்த நிலையில், ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள், சர்வதேச மாணவர்களை ஜெர்மனிக்கு வருமாறு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெர்மனியில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சமாளிக்க, சர்வதேச மாணவர் விசாக்களை துரிதப்படுத்துவது மிகவும் அவசியம் என்று ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் கூறுகின்றன. சர்வதேச மாணவர்கள் ஜெர்மனியில் படித்து முடித்துவிட்ட பிறகு, அவர்களுக்கு அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் தொழிலாளர் பிரச்சனை பெருமளவு தீரும் என்று கூறுகின்றனர்.