காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய முயற்சியாக, விமானங்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். இந்த முடிவு, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளை பாதிக்கலாம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, விமான வேகத்தை 15% குறைப்பதன் மூலம், அட்லாண்டிக் கடல் கடக்கும் பயண நேரம் 50 நிமிடங்கள் வரை அதிகரிக்கலாம். இருப்பினும், இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு 5% முதல் 7% வரை குறைந்து, கார்பன் உமிழ்வு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் விமானப் போக்குவரத்து சுமார் 2.5% முதல் 4% வரை பங்களிக்கிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் விமானப் போக்குவரத்துத் துறையின் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு இருந்தாலும், இது தொடர்பான முயற்சிகள் இன்னும் போதுமானதாக இல்லை. இந்த நிலையை மாற்ற, 2030 ஆம் ஆண்டுக்குள் நான்கு முக்கிய இலக்குகளை அடைய வேண்டும் என ஆய்வு கூறுகிறது.














