கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், எதிர்பார்த்த வருவாய் கணிப்பை விட குறைவான காலாண்டு வருவாயை பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்துள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பர வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக, வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வருவாயில் பெரும் பகுதி டிஜிட்டல் விளம்பரங்கள் மூலமாகவே கிடைக்கிறது. இந்நிலையில், யூடியூப் மற்றும் சாதாரண தேடு பொறி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் 61.24 பில்லியன் டாலர்களில் இருந்து 59.04 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. குறிப்பாக, யூடியூபில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலமாக வருவாய் 8% குறைந்து 7.96 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதம், பணி நீக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விளம்பரதாரர்கள், விளம்பரத்திற்கு குறைந்த அளவிலான தொகையை செலவு செய்ய திட்டமிட்டதே இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, கூகுள் நிறுவனத்திற்கு, தற்போதைய சந்தை நிலவரம் சவாலானதாக உள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.