சென்னை ஐ.ஐ.டி.,யுடன் 'கூகுள்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது,'' என, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கான கூகுள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு இந்தியாவில் மிகவும் வேகமாக உள்ளது. விவசாயம், மருத்துவம் என பல துறைகளிலும் இதை பயன்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக 100 இந்திய மொழிகளில் கூகுளில் தேடும் வசதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதுபோல் உலகெங்கும் 1,000 மொழிகளிலும் தேடும் வசதி கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருதலைப் பட்சமாக உள்ளதா என்பது குறித்து, இந்திய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். சென்னை ஐ.ஐ.டி.,யில் இதற்காக பல்துறை ஆய்வு மையம் அமைய உள்ளது என்று கூறினார்.














