இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு திருத்தி அமைக்க முயற்சிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி 75 கி.மீ. துாரம் 3 நாள் நடைபயணம் சென்னையில் நேற்று துவங்கியது. இந்த நடைபயணம் ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் நினைவிடத்தில் முடிகிறது. இதற்கான துவக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
துவக்கவிழாவில் பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் பேசினர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசுகையில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி நடத்தப்படுகிற இந்த நடைபயணத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்றார்.முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில், இந்த நடைபயணத்தின் முக்கியத்துவத்தை வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ''அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கர் தலைமையில் இடம்பெற்ற 70 பேரில் மல்லாடி கிருஷ்ணசாமி, எம்.கோபால்சாமி என இரு தமிழர் இடம் பெற்றது பெருமை. அரசியல் சாசனத்தை பா.ஜ. க அரசு அழிக்க நினைக்கிறது. இதை தடுக்க நாடு முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் பேசுகையில் ''இந்திய அரசியலமைப்பு சட்டம் அடித்தட்டு மக்களை பாதுகாக்கிறது. எனவே அச்சட்டத்தை பாதுகாக்க காங்கிரசார் போராட வேண்டும்'' என்றார்.














