சென்னை விமான நிலைய நிர்வாகம், விமான நிலைய விரிவாக்கத்திற்காக அரசிடம் கேட்ட 306 ஏக்கர் நிலத்தை வழங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. இந்த புதிய முனையம் வாயிலாக விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணியரின் எண்ணிக்கை 1.7 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரிக்கும்.
இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை விமான நிலையம் தற்போது 1,317 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கூடுதலாக 306 ஏக்கர் நிலம் கேட்டு விமான நிலைய நிர்வாகம் தரப்பில் 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் 'அவ்வளவு ஏக்கர் நிலம் வழங்க சாத்தியமில்லை' என டிட்கோ நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளீதரன் விமான நிலைய நிர்வாக அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 306 ஏக்கர் என்பதை குறைத்து எவ்வளவு ஏக்கர் நிலம் கேட்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் என்று அவர்கள் கூறினர்.