மரவள்ளிக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறட்சியை தாங்கி வளரும் பயிர் என்பதால், அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் கிழங்கினை சேலம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதற்கான விலையை தனியார் ஆலைகளே நிர்ணயம் செய்கின்றன.
இடைத்தரகர்கள் மற்றும் தனியார் ஆலைகள் நியாயமான விலைக்கு கிழங்கை கொள்முதல் செய்வதில்லை. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் துவங்கவுள்ள நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம், அரசே மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்ய வேண்டும். அரசு சார்பில் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.