பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் மிகப்பெரிய சுரங்க நகரத்தை அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீளும் இந்த சுரங்க நகரம், 260 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரின் மிகப்பெரிய பலமாக இந்த வலைப்பின்னல் போன்ற சுரங்க நகரம் அறியப்படுகிறது. எனவே, இந்த சுரங்கத்தை அழிப்பதற்கான முக்கிய தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் தீட்டி வருகிறது.ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு அவர்கள் அமைத்துள்ள சுரங்க நகரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சுரங்கத்தில் பல்வேறு வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, குடிநீர், உணவு, எரிபொருள், ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விநியோகம் தடுக்கப்பட்ட போதும், அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது. அதனால், சுரங்க நகரத்தை அழிக்கும் வகையில் புதிய ரசாயன ஆயுத தாக்குதலில் ஈடுபட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுரங்கத்தின் நுழைவு வாயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு நுரை குண்டுகள் வீசப்படும். இவை, பாதைகளை அடைத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கத்தை விட்டு வெளியேற முடியாமல் தடுக்கும். அவர்களின் தாக்குதலை நிறுத்தும். இது தவிர, சுரங்கத்தில் தண்ணீரை செலுத்தி, பயங்கரவாதிகளை செயல் இழக்க செய்யவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.