வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியின் பிரதான சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. டெல்லி அருகில் உள்ள தன்கார் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக இன்று அதிகாலை விபத்து நேரிட்டது.
மேலும் சில நாட்களுக்கு அடர் பனி நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடர் பனி அதிகம் இருக்கும் நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்காது என்பதால் சாலைப் பயணங்களை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அடர் பனி காரணமாக காற்றின் தரம் இன்று அதிகாலை 378 என்ற அளவில் இருந்ததாகவும் இது மிகவும் மோசமான நிலை என்றும் SAFAR நிறுவனம் தெரிவித்துள்ளது.