செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்ட 109 கிமீ நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (20.2.2025) திறந்து வைத்தார். இந்த திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிய சாலைகள், உயர்மட்ட பாலங்கள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மருதாடு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் கனரக வாகன நெரிசல் குறையும். இதன் மூலம், 67 கிராம மக்கள் நகர்புற பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு எளிதாக செல்ல இயலும். சென்னை – கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் உருவான இந்த சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.