அக்டோபர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை 18% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பாக, அக்டோபர் மாதத்தில், 9543 வாகனங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், 1678 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த வருட அக்டோபர் மாதத்தில், மொத்த விற்பனை 8108 ஆகவும், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கை 1747 ஆகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி யூஜி முராடா, "இந்த வருட பண்டிகை காலத்தில், எங்கள் நிறுவனம் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியச் சந்தையில், விற்பனையில் 18% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில், ஹோண்டா அமேஸ் வாகனம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த பண்டிகை காலத்தில், இந்த வாகனம், விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், இந்த காலாண்டு எங்கள் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக கருதப்படும் ஹோண்டா சிட்டியின் 25ஆம் ஆண்டு கொண்டாட்டம் ஆகும். தொடர்ந்து இந்த வாகனத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.