மின்சார வாகன நிறுவனமான ஹாப் எலக்ட்ரிக் மொபிலிடி, அடுத்த மூன்று ஆண்டுகளில், ராஜஸ்தான் நீம்ரானா பகுதியில் புதிய மின்சார வாகன உற்பத்தி மையம் அமைக்கவுள்ளது. அதற்காக 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியில், ஹாப் எலக்ட்ரிக் மொபிலிடி நிறுவனத்திற்குச் சொந்தமாக, சுமார் 180000 இருசக்கர வாகனங்கள் தயார் செய்யும் திறன் கொண்ட வாகன உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த நிதியாண்டு முதல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நீம்ரானா பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ள இந்நிறுவனம், புதிய மின்சார வாகன உற்பத்தி மையத்தை இங்கு நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தோற்றுனர் கேத்தன் மேத்தா இதனை உறுதி செய்துள்ளார். அரசாங்கத்தின் திட்டம் மூலம், புதிதாக மின்சார வாகன உற்பத்தியில் இறங்கும் 3 நிறுவனங்களுள் ஒன்றாக, ரேஸ் பவர் இன்ஃப்ரா நிறுவனத்தின் இணைப்பில் ஹாப் எலக்ட்ரிக் மொபிலிடி நிறுவனம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில், 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. நேற்று, நிறுவனம் தனது புதிய மின்சார வாகனத்தை அறிமுகம் செய்தது. அப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய இருசக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த வாகனம், ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய திறன் கொண்டதாகும். இதன் விலை 125000 முதல் 140000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பேசிய கேத்தன் மேத்தா, “இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 70% இருசக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள் வகையைச் சேர்ந்ததாகும். பெரிய டயர்களுடன் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அதே வகையான மின்சார வாகனத் தயாரிப்புகள் மிகவும் குறைவு. அதனை நாங்கள் செயலாக்க உள்ளோம்” என்று கூறினார். இந்த நிறுவனத்தின் சார்பில், ஸ்கூட்டர் மாடலில் 2 வித இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. HOP LEO மற்றும் HOP LYF என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனங்கள், 70 முதல் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டவையாகும். அவற்றின் விலை 72000 முதல் 95000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 புதிய தயாரிப்புகளைப் புதிதாக நிறுவும் திட்டத்தில், நிறுவனம் செயலாற்றி வருவதாக இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.