ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளில் கிரஷர் உரிமையாளர்கள், ஜனவரி 1-ம் தேதி முதல், ஜல்லி கற்கள் மற்றும் எம். சாண்ட் வழங்குவதற்காக, ஒவ்வொரு டன்னுக்கும் 100 ரூபாயாக விலையை உயர்த்தினர். இதனால், லாரி உரிமையாளர்களுக்கு நாள்தோறும் 3,000 ரூபாயின் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பின்பு, கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு டன் ஜல்லிக்கு 80 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் உடன்படிக்கையை மீறி விலை உயர்த்தினர். இதனால், 3,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, லாரி உரிமையாளர்கள், இன்று முதல் ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதில் சுமார் 2000 லாரிகள் நிற்கும் என்று கூறப்பட்டது.