கலிபோர்னியாவில், சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்த மருத்துவ ஆய்வுக்கூடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் அமைந்துள்ள வேர்ஹவுஸ் ஒன்றில், வழக்கமாக நடத்தப்படும் கண்காணிப்பு மற்றும் ஆய்வின் போது இந்த சட்டவிரோத மருத்துவ ஆய்வுக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான எலிகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கோவிட் 19 உள்ளிட்ட கொடிய நுண் கிருமிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான குறும் பெட்டிகள் கிடைத்துள்ளன. இவற்றில் ஆபத்தை விளைவிக்க கூடிய 20 அபாய வைரஸ்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், பாக்டீரியா மற்றும் பிற நுண் நுண்மிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கோவிட் 19, இ கோலி, எச்ஐவி, மலேரியா, ஹெப்பாடிடிஸ் உள்ளிட்ட கிருமிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்த போது மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு பல்வேறு வகையான 800 ரசாயன பொருட்கள், அமிலங்கள் மற்றும் திரவங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை, எந்த வகையான ரசாயனம் என கண்டறிய முடியாத அமைப்பில் இருந்துள்ளது. கடந்த ஜூலை 7ஆம் தேதி, இங்கிருந்த அபாயகரமான பொருட்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொது மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் நிகழாது என உறுதி செய்துள்ளனர். பிரெஸ்டிஜ் பயோடெக் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த ஆய்வுக்கூடம், அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.