இந்தியா - சீனா எல்லையில், 3.9 பில்லியன் டாலர் மதிப்பில், நீர் மின் நிலைய திட்டம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் மலைப் பாங்கான பகுதிகளில் அமைக்கப்படும் நீர் மின் நிலைய திட்டங்களில் இதுவே மிகப்பெரியதாக சொல்லப்படுகிறது. மேலும், புத்தாக்க எரிசக்தி உருவாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், 67.2 பில்லியன் ரூபாய் மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாலைகள், பாலங்கள் அமைப்பது, வெள்ள நிவாரணங்கள் அளிப்பது போன்ற திட்டங்கள் இதன் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், தீபாங் திட்டத்தில், 2880 மெகாவாட் திறனில் நீர் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனை நாட்டின் நீர்மின் நிறுவனம் என்ஹெச்பிசி அமைக்க உள்ளது. சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் அமைக்கப்படும் இந்த திட்டம் செயல்படத் தொடங்குவதற்கான காலம் 9 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புவியியல் சார்ந்த கடினமான சூழல்கள், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புகள் போன்ற காரணங்களால் இந்த திட்டம் இன்னும் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இமய மலைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்கள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.