சிங்கப்பூரில் நடைபெற்ற 25வது ஆசிய பிராந்திய மாநாட்டில், இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது.
உலகளாவிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறைகள் இணைந்து செயல்படும் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வாகியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 25வது ஆசிய பிராந்திய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில், இந்தியா வெற்றி பெற்று முக்கிய உறுப்பினராக இணைந்தது. இந்தியாவில் இன்டர்போல் விவகாரங்களை பொறுப்பாக மேற்கொண்டு வரும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். குற்ற கும்பல்கள், சைபர் குற்றங்கள், மனிதக் கடத்தல், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சினைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த முன்னேற்றம் முக்கிய பங்காற்றும் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆசிய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் இந்தியா முன்னணி பங்கு வகிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.