உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், மரபணு மாற்றப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், வணிகப் பயன்பாட்டுக்கு இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு வருவதற்கு இரண்டு ஆண்டு காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கான தேவை மிகவும் அதிகம். உலக அளவில், சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் 70% எண்ணெய், அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசியா, மலேசியா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கான அனுமதி, இந்திய வரலாற்றில் முக்கிய மைல்கல் என்று மரபணு துறை சார்ந்த வல்லுனர் தீபக் பென்டால் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான அவர், தனது குழுவுடன் இணைந்து, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து, இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும், தற்போதைய மரபணு மாற்றப்பட்ட கடுகு மூலம் எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இறக்குமதி குறைவதால், பொருளாதாரம் உயரும் நிலை ஏற்படும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, தீபக் பென்டால் குழுவினர், இந்த விதைகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி கோரினர். அதைத் தொடர்ந்து, இதன் பொருட்டு, கள ஆய்வுகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்பாட்டுக்கு மக்களிடையே எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனால் “இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பாதுகாப்பானவை. இதனால் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் நேராது” என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, விதைகளுக்கு அரசாங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. முன்னதாக, மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்கு மட்டுமே கடந்த 2002 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.