சர்வதேச அளவில் சூரிய மின் உற்பத்தி துறையில் இந்தியா 4ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த இடத்தை கைப்பற்றியுள்ளது.
சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை, இந்தியா பன்மடங்கு உயர்வை பதிவு செய்து வருகிறது. கடந்த 2015 ல் சர்வதேச அளவில் 9ம் இடத்தில் இருந்த இந்தியா, 2023ல் 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தி அளவில் இந்தியாவின் பங்கு 5.8% என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து 18 TWH சூரிய மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 156 TWH உடன் சீனா முதலிடத்திலும், 33 TWH உடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 22 TWH உடன் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள் அதிகப்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது இதன் மூலம் உறுதி ஆகியுள்ளது.