இந்த நூற்றாண்டு முழுவதும் அதிக மக்கள் தொகை கொண்ட உலக நாடாக இந்தியா முதன்மை வகிக்கும் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 2060 களில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11ஆம் தேதி, ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையைச் சேர்ந்த மக்கள் தொகை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், “2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை 820 கோடியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் இது தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2080 களில் 1030 கோடி அளவில் உயரும். அதன் பிறகு மக்கள் தொகை படிப்படியாக குறைந்து, நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக இருக்கும். வரும் 2100 ஆம் ஆண்டு வரை, இந்தியா உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும். 2060 ஆம் ஆண்டில் உச்சம் பெறும் இந்திய மக்கள் தொகை, நூற்றாண்டின் இறுதியில் 12% அளவுக்கு வீழ்ச்சி அடையும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














