அதிவிரைவான இணையதள சேவையை வழங்கும் விண்வெளி வர்த்தகத்தில் சீனாவை மிஞ்சி இந்தியா கலக்கி வருகிறது.
விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.36 லட்சத்து 63 ஆயிரத்து 344 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்தது. வருகிற 2025-ம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.49 லட்சத்து 17 ஆயிரத்து 240 கோடியாக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் மேற்கத்திய தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களால், பல செயற்கைக்கோள் இயக்கும் நிறுவனங்களுக்கு சீனா ஒரு சிறந்த தேர்வாக இருக்காது என்று கூறப்படுகிறது.
நம்பக தன்மை, செலவு குறைவு உள்ளிட்ட காரணிகளால் விண்வெளி வர்த்தகத்தில் சீனாவை, இந்தியா முந்த கூடிய சூழல் உள்ளது. எனினும், 2020-ம் ஆண்டில் அனைத்து புவியில் இருந்து செலுத்திய செயற்கைக்கோள்களின் வரிசையில் சீனா 13.6 சதவீதமும், இந்தியா 2.3 சதவீதமும் கொண்டிருந்தது. 2013-ம் ஆண்டில் செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர் ஒன்றின் செலவு, அதே ஆண்டில் நாசா அனுப்பிய விண்வெளி ஆய்வு விண்கலத்தின் செலவை விட 10-ல் ஒரு பங்கு அளவே இருந்தது. அதனால், குறைந்த செலவில் பெரிய ஏவுதிறனுடன் உள்ள நாடுகள் அதிகம் இல்லை என்று வானியல் இயற்பியலாளர் ஜோனாதன் மெக்டோவல் கூறுகிறார்.














