இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பிரதமர் மோடி மற்றும் அதிபர் முகமது முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இரு நாடுகள் இடையே முதலீட்டுக்கான ஒப்பந்தம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகின. முன்னதாக பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிதிசார் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம், எண் உள்கட்டமைப்பு, முதலீடு, உள்கட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடர்பு என்ற பல்வேறு துறைகளில் கூட்டுறவை மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ரூபே கடன் பற்று அட்டைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜேவான் அட்டைகள் இடையிலான இணைப்புக்கான ஒப்பந்தம் அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.