நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்திய மருந்து துறையின் ஏற்றுமதி 4.22% உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 14.57 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் மருந்து ஏற்றுமதி பிரிவின் இயக்குனர் உதய பாஸ்கர் இந்த தகவல்களை தெரிவித்தார். மேலும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், மருந்து துறையின் ஏற்றுமதி மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 13.98 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மருந்து ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றதை சுட்டிக் காட்டி பேசிய அவர், 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 137.7% ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறினார். அண்மையில், இந்திய மருந்து துறையின் வளர்ச்சி குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.